Smart Tenkasi

எழுப்புதலுக்குப் போதுமான கிரயம் கொடுப்பாயா?

எழுப்புதலுக்குப் போதுமான கிரயம் கொடுப்பாயா?
எழுப்புதலின் கிரயம்: நொறுங்குண்ட இருதயமே.
    “உன் இருதயம் இளகி, நீ கர்த்தருக்கு முன்பாக தாழ்த்தி உன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு எனக்கு முன்பாக அழுதபடியினால் நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்” – 2 இராஜா 22:19.
    கர்த்தரைவிட்டு விலகி வேறே தேவர்களுக்கு தூபம்காட்டி தங்கள் கைகளின் கிரியைகள் எல்லாவற்றிலும் தேவனுக்கு கோபமூட்டினபடியால் தேவனுடைய உக்கிரகோபம் பற்றியெரியும், அது அவிந்து போவதில்லை என்று கர்த்தருடைய வார்த்தை வெளிப்பட்டபோது, அதைக் கேட்டு இருதயம் இளகி தேவனுக்கு முன்பாக தாழ்த்தி அழுது விண்ணப்பம் பண்ணின விண்ணப்பத்தைத் தேவன் கேட்டார்.
    என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டு திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாத்தை மன்னித்து அவர்கள் தேசத்ததுக்கு சேமத்தைக் கொடுப்பேன் (2 நாளா 7:14) என கூறப்பட்டுள்ளதைப் பாருங்கள்.
    சிறுமைப்பட்டு ஆவியில் நொறுங்குண்டு என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன் என கர்த்தர் சொல்லியிருக்கிறார் (ஏசாயா 66:2).  ஆம் நொறுங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார் (சங் 34:18).  தேவனுக்கேற்கும் பலி நொறுங்குண்ட ஆவிதான்: தேவனே நொறுங்குண்டதும் நறுங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர் (சங் 51:17)
    உன்னதத்திலும், பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான் பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும் நொறுங்குண்டதும் பணிந்த ஆவியுள்ளவாகளிடத்திலும் வாசம்பண்ணுகிறேன் என்கிறார் (ஏசா 57:15).
    தேவனே, என்னை நொறுக்கும் என்று ஜெபக்க ஆவலுள்ளவர்களா யிருக்கிறோமா?
    நாம் ஒவ்வொருவரும் தனித்தனியாய் தேவனுடைய நிபந்தனையை நிறைவேற்றும்போது சபையில் அதன் பலனைக் கண்டடைவோம்.
    நாம் அனைவரும் ஒருமனதோடு ஒரே இடத்தில் கூடி உலக எழுப்புதலுக்காக உபவாசித்து ஜெபிக்க ஏவப்படுவோம்.  கர்த்தர் தேசத்துக்கு சேமத்தைக் கட்டளையிவார்.  ஜனங்கள் ஜீவனுள்ள தேவனிடம் திரும்புவார்கள்.
    “தன்னை தேவனிடம் பூரணமாய் ஒப்படைக்கும் ஒருவனைக் கொண்டு அவர் எத்தனை மகத்துவமான காரியங்களைச் செய்யக்கூடும் என்பதை உலகம் அறியவில்லை” என்று ஒருவர் கூறியதைக் கேட்ட டி.எல்.மூடி “அப்படியானால் தேவ கிருபையால் நானே அந்த மனிதனாயிருப்பேன்” என்று கூறிக்கொண்டே தன்னை ஒரு உடைந்த பாத்திரமாய்க் கர்த்தர் பாதத்தில் சமர்ப்பித்தார்.  கர்த்தர் அவரை அதிசயமாய் பயன்படுத்தினார்.
    வெஸ்லி பின்னி முதலியோரும் தங்கள் கால உலகமும் சபைகளும் இருந்த நிவாரணமற்ற, நிர்பாக்கிய நிலையைக் கண்டு மனம் உடைந்து நொறுங்கிய பாத்திரங்களாய்த் தங்களை கல்வாரி நாதர் காலடியில் படைத்த போதுதான் தேவையான வல்லமையைப் பெற்று உலகத்தில் பெரிய எழுப்புதல்களை உண்டுபண்ணக்கூடியவர்களாயினார்.
    தேவ ஜனங்கள் “தங்களை தேவன் காண்பதுபோலவே கண்டு” தங்களைத் தாழ்த்தி, உடைத்து நொறுக்கி, பெருமூச்சுவிட்டு அழுது கண்ணீர் பெருக்கெடுத்தோடியபோதே தேவ அக்கினி அவர்கள்மேல் விழுந்தது. அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு ஆனந்த கண்ணீர்வடித்தனர்.
தியாக ஜெபம்
தியாக ஜெபமா? அது என்ன?
    ஒரு நாளை அல்லது இரண்டோ மூன்றோ தினங்களை வேறுபடுத்தி தேவனோடு உடன்படிக்கை செய்து, இக்கால உலகத்தின் இக்கட்டான நிலைமை மாறவோ, ஆழமான ஆவிக்குரிய அனுபத்தைப் பெறவோ நாடி, ஊக்கமான ஜெபத்துக்குத் தடையாய் காணப்படும் ஆகாரம் முதலானவற்றை ஒதுக்கிவைத்து “தேவனோடு தனித்து ஜெபத்தில் தரித்திருப்பதே”.
    ஒருவேளை ஆகாரத்தை வெறுப்பது போதுமானதல்ல குறைந்தப்பட்சம் ஒரு நாளாவது இருக்கவேண்டும்.  அப்போது தேவன் உன்னைத் தம்மாலும் தமது வல்லமையாலும் நிரப்புவார்.  அந்த இன்பத்தில் நீ ஆகாரத்தையே மறந்துவிடுவாய்.
அப்பொழுது உன் உடலே தேவனுக்கு ஜீவபலியாகிவிடும் - ரோமர் 12:1
இப்பேர்பட்ட ஜெபம் தேவனை மகிழ்விப்பதால் அவர் தமது கிருபையை இறங்கப்பண்ணுவார்.  இவ்வித அனுபவத்தை பரிசுத்த வேதத்தில் அதிகம் காணமுடிகிறது.  நமதாண்டவராகிய இயேசுகிறிஸ்துவும் இவ்வித அனுபவமுடையவராயிருந்தார்.  நாம் அவர் மாதிரியைப்பின்பற்ற வேண்டியவர்களாயிருக்கிறோம்.
    இயேசு கிறிஸ்து சிலுவையில் சிந்தின இரத்தத்தால் கிரயத்துக்கு வாங்கப்பட்ட நீ உனக்கு சொந்தமானவனல்ல, அவருக்கே சொந்தம்.  நீ அவரை உண்மையாய் நேசிக்கிறாயானால், அவரை நெருங்கி வாழ விரும்புகிறாயானால், அவருக்காக உலகத்தையும் உலகத்திலுள்ளவைகளையும் வெறுக்கிறாயானால் அவரை மகிமைப்படுத்துவாதற்காக எந்த கிரயத்தையும் பெரிதாய் கருதமாட்டாய்.
    உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து உன்கதவைப் பூட்டி அந்தரங்கத் திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு.  உபவாசிக்கும்போது உன் பிதாவுக்கே காணப்படும்படியாக உன் தலைக்கு எண்ணெய்பூசி உன் முகத்தைக் கழுவு. அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய் பலனளிப்பார் (மத் 6:6,17,18).
    சேவைக்கே பெரும் மதிப்பளிக்கின்றனர் பலர்: கர்த்தரோ ஆழ்ந்த அன்பையும் அவர்பாதத்தில் ஆவலோடு அமர்ந்து தனித்திருப்பதையுமே பெரிதாய்ப் பாராட்டுகிறார். இவ்வித இனிய உறவு இல்லாத சேவை வல்லமையற்றதாகும்.
    அவரோடு நாம் தனித்திருக்கும் சமயத்தின் அளவைக் கொண்டே நாம் அவர் மேல் வைக்கும் அன்பை அளக்கலாம்.  அந்த அன்பு நமது சேவையை கனியுள்ளதாக்கும்.  அவரது அன்பும் அருளுமின்றி நாம் ஒன்றுமில்லையே.
    பாவமும், எதிர்ப்பும் பல உள்ளங்களில் புகுந்து அங்கு எரிந்துகொண்டிருந்த தேவ அன்பை அணைத்துவிட்டதே.  இன்றைய தேவை ஒரு உன்னதத்தின் எழுப்புதலே: ஏனெனில் கர்த்தரின் வருகை மிக சமீபமாயிற்று. நாம் அவர் சிங்காசனத்தின் முன்நின்று கணக்குக் கொடுக்கவேண்டிய நாளும் நெருங்குகிறது.
    விசுவாசிகள் ஒன்றாய் கூடி ஜெபிக்கும்போது அக்கினி பற்றி எரிவது நிச்சயம். எழுப்புதலின் கிரயத்தைக் கொடுக்க நாம் ஆயத்தமா?