Smart Tenkasi

இறை நம்பிக்கை

இறை நம்பிக்கை 
           இறை நம்பிக்கையுடையவர்கள் எவ்வளவு இன்னனல்களை எதிர் கொண்டாலும் தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையிலிருந்து பின்வாங்குவதில்லை.
          ஒருவர் தான் கொண்டுள்ள தெய்வீக நம்பிக்கைக்கு எதிராய் பிறர் செயல்படும் போதும், மறுத்து பேசும் போதும், அவர்கள் கொண்டுள்ள தெய்வீக நம்பிக்கையிலிருந்து பின்வாங்குவதில்லை. தன் உயிரை தியாகம் பண்ண வேண்டிய நிலை வந்த போதும் முழு நம்பிக்கையுடன் உயிரையும் விடுகின்றனர். தன் உயிரை காப்பற்றிக் கொள்வதற்காக தங்களது தெய்வீக கொள்கையின் நம்பிக்கையை விட்டுவிடவில்லை. தன் ஜீவனைப் பார்க்கிலும் நித்திய ஜீவனைக்குறித்த நம்பிக்கையுடன் மரித்தார்கள் .
         மதத்தின் பேரில் வைத்துள்ள நம்பிக்கை நிலையானக் கொள்கையுடையதல்ல, மனிதன் மதத்தின் கொள்ளையை மாற்றிக் கொள்வான் அப்பொழுது மதத்தின் பேரில் வைத்துள்ள நம்பிக்கையும் நிலையற்றதாகி விடும். இறை நம்பிக்கை மதக் கொள்கைக்கு அப்பாற்பட்டது. தேவ பக்திக்கேதுவான சத்தியங்களடங்கியது தான் இறை நம்பிக்கை. 
         மதங்களின் பெயரால் உண்டாகும்பக்தி, கொள்கையின் அடிப்படையில் காணப்படுமானால் அது ஒரு வித வெறிச் செயலைத் தூண்டுகிறதாக காணப்படும். இந்நிலையில்தான் மத நல்லிணக்கம் என்ற போர்வையை போர்த்திக் கொள்ள கூறுகிறார்கள். நல்லினக்கம் வெறிச் செயலை கட்டுபாட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவினாலும் மதக் கொள்கைகளில் வெறிகொள்ளும் போது மனித நேயம் அற்று போய் மதக் கலவரங்கள் உண்டாகுகின்றன. 
         ஒரு யானை வெறி கொண்டால் என்ன நடக்கிறதோ, அப்படித்தான் மதக் கொள்கைகளில் வெறிக் கொண்டு மனித நேயப் பண்புகளைக் கடந்து ஒருவரை ஒருவர் தாக்கித், தங்களைத் தாங்களே   அழித்துக் கொள்ளுகிறார்கள். அது மாத்திரம் அல்ல சமாதானப் புறாவும் பறந்து போய் விடுகிறது. மதங்களின் பெயரால் வகுத்துள்ள கொள்கைகள் மத சுதந்தரத்தைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடியதாக இருந்தாலும் மனித சுதந்திரம் காக்கப்படுவதில்லை. 
         இறை நம்பிக்கை என்பது ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உள்ள சுதந்திரம். ஒரு மனிதன் தேவ பக்திக்கேதுவான சத்தியங்களை அறியும் போது அவனுக்குள் உண்டாகும் மாற்றமே தன்னை ஒரு மனிதனாக காணச் செய்கிறது மட்டுமல்ல சக மனிதர்களை சகோதரர்களாக நினைத்து அன்பு கூறச் செய்கிறது .
         ஓவ்வொரு தனி மனிதனும் மாற வேண்டும். மன மாற்றமே இன்று முக்கியமாகத் தேவைப்படுகிறது. அப்பொழுதுதான் ஒவ்வொரு மனிதனும் தன்னடக்கமுள்ளவனாய் தன்னை காத்துக் கொள்வான். மதுபானம் போன்ற தீய பாவ செயல்களுக்கும் தன்னை விலக்கி காத்துக் கொள்வான். அவன் குடும்பம் நலன் பெறும்.
         இறை நம்பிக்கை என்பது ஆணி வேர் போன்றது. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கக் கூடாது என்பார்கள். மண் குதிரை தண்ணீரில் கரைந்து போகிறது. போலவே பலருடைய இறை நம்பிக்கையற்ற வாழ்கை கால வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, அடையாளம் தெரியாமல் போய்விடும். தேவ பக்திக்கேதுவான சத்தியத்தால் தன்னம்பிக்கையுடனும், இறை நம்பிக்கையுடனும் வாழ்கையை எதிர் கொள்ளுபவர்கள் இந்த வாழ்விலும், நித்திய வாழ்விலும்  பிரயோஜனமடைவார்கள்.
         இரவு முடிந்து பகல் கண்டிப்பாக வரும் என்று எதிர்பார்க்கிறது போல மனித வாழ்வில் காணப்படும் இரவின் இருள் விலகி பகலின் வெளிச்சம் உதிக்கட்டும்.