Smart Tenkasi

வாழ்க்கை என்னும் பயணம்

payanam.jpg

    இவ்வுலக வாழ்க்கையானது கருவறையிலிருந்து தோன்றி கல்லறை வரையிலான பயணந்தான்.
    வாழ்க்கை என்னும் தேர்வில் வெற்றிபெற காப்பியடிக்க முடியாது.  ஏனெனில் வாழ்க்கை என்னும் தேர்வை எழுதின நீயே திருத்துகிறாய்.  வாழ்க்கை என்கிற ஆடையில் எப்பொழுதும் நன்மை, தீமை என்கிற இருவகை நூலிருக்கும்.


வாழ்க்கை இரண்டு பகுதிகளை உடையது.
சென்றகால நினைவு – வருங்கால கனவு


வாழ்க்கை என்ற பயணத்தில் இன்பம், துன்பம், மகிழ்ச்சி, வெறுப்பு, கோபம், அன்பு, பரிவு, பாசம், நேசம் என்ற மேடுபள்ளங்கள் மாறிமாறி வருகின்றன.  இதனை நன்கு புரிந்துகொண்டவர்கள் விட்டுக்கொடுப்பார்கள். கணவன், மனைவி வாழ்க்கையிலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழும்போதுதான் மனரம்மியமாயிருக்க முடியும்.  மனரம்மியமோ நல்லவிருந்து.  தங்கள் வீம்புகளில் மேன்மை பாராட்டிக் கெட்டுப்போனவர்கள் ஏராளம்.


விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை
கெட்டுப்போகிறவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை

    விட்டுக்கொடுப்பவர்கள் அன்பு செய்து வாழ்வார்கள்.  பரிசுத்த வேதம் அன்புகூறு என்றும் உன்னைப்போல் பிறனையும் நேசி என்ற உயர்ந்தப் பண்பை வெளிப்படுத்துகிறது.  விட்டுக்கொடுத்து வாழ்பவர்கள் இவற்றைக் கடைபிடித்து வாழ்வார்கள்.  தான் ஒரு பகுத்தறிவுப் படைத்த மனித சமுதாயத்தைச் சார்ந்தவன் என்ற பரந்த மனப்பான்மையுடன் தனக்காக மட்டுமல்ல தன்னால் இயன்ற உதவியை பிறருக்கும் செய்து பிறருக்காகவும் வாழ்வார்கள்.

    “அவனவன் தனக்கானவைகளை அல்ல பிறனுக்கானவைகளையும் நோக்குவானாக” என்ற கிறிஸ்து இயேசுவின் சிந்தை உடையவர்களே தன்னைப்போல் பிறனையும் நேசித்து பிறருக்கு உதவி செய்வார்கள்.  மனு~ர் உங்களுக்கு எதைச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் என்று பரிசுத்த வேதம் கூறுகிறது.  பிறரிடத்திலிருந்து நாம் ஒன்றை எதிர்பார்க்கும்போது அவர்களும் நம்மிடம் ஒன்றை எதிர்பார்க்கலாமல்லவா. பிறர் நமக்கு எதை செய்யவேண்டுமென்று விரும்புகிறோமோ அப்படியே அவர்களும் நம்மிடம் ஒன்றை விரும்பலாமல்லவா. இப்படி இரண்டு விருப்பங்களுக்கிடையில் உண்டாகும் பரிமாற்றமே நன்மைசெய்தல். அதே வேளையில் பிரதிபலன் கருதாமல் நன்மை செய்வதே மேலானது.  மனித வாழ்க்கையில் ஜாதி, மதம், படித்தவன், படிக்காதவன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற ஏற்றத்தாழ்வுகளுக்கு அப்பாற்பட்ட அன்பினாலும், உரிமையிலும் இணைக்கப்பட்டதுதான் தேவ அன்பு.  இவ்வாறான வாழ்க்கை வாழ்பவர்கள் மட்டுமே உலகில் உண்மையாய் வாழ்பவர்கள் மற்றவர்கள் வாழ்பவர்களைப்போல் நடிக்கிறவர்கள்.  இவர்கள் மாயை தோற்றமுடைய ஒருவித போலியான வாழ்க்கை வாழ்பவர்கள்.  இவ்வாழ்க்கை மாயையான இந்த உலக வாழ்க்கைக்கு ஒத்துப்போனாலும் நித்திய வாழ்க்கைக்கு உகந்ததல்ல.

    “ஒரே ஒரு வாழ்க்கை” இது அர்த்தமுள்ள வாழ்க்கையாகவும் இந்த உலக வாழ்க்கையைக் கடந்து நித்திய வாழ்க்கையை பெற்றுக் கொள்வதாகவும் இருக்கவேண்டும்.  வாழ்க்கை மரணத்தோடு முடிந்துப்போகிற வாழ்க்கையல்ல மரணத்திற்குப்பின்னும் ஒரு வாழ்க்கை இருக்கிறது அதுதான் நித்திய வாழ்வு.  மறுபிறவியைக் குறித்து சிலர் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள், அவர்கள் நம்பிக்கையின்படி ஒருவேளை திருப்தியடைந்திருந்தாலும், மறுபிறவி என்பது உண்மையானதல்ல.  சரீரப்பிரகாரமாக வாழ்க்கைப் பயணம் மரணத்தோடு முற்றுப் பெற்றாலும், அவனுடைய ஆன்மீகப் பயணம் இன்னொரு இலக்கை நோக்கி பயணிக்கிறது.

    மறுபிறவியைக் குறித்து நம்பிக்கைக் கொள்ளுகிறவர்கள் இந்த உலகத்திலேயே ஏதோ ஒன்றாக பிறவியெடுக்கிறோம் என்பதுதான் அவர்கள் நம்பிக்கை.  மனிதனுடைய வாழ்க்கைக்கும் மற்ற ஜீவன்களின் வாழ்க்கைக்கும் வித்தியாசம் உள்ளது. ஏனென்றால் மற்ற ஜீவன்களுக்கு ஆத்துமா இல்லை மனிதர்களுக்கோ ஆத்துமா உண்டு.  மற்ற ஜீவன்களின் வாழ்வு மரணத்தோடு முடிந்துவிடுகிறது, மனிதர்களின் வாழ்வு மரணத்துக்குப்பின் நித்திய வாழ்வை நோக்கி பயணிக்கிறது.  இந்த வாழ்க்கைப் பயணத்தின் முடிவில் நரகம் என்ற நித்திய வாழ்க்கையோ, பரலோகம் என்கிற நித்திய வாழ்க்கையோ பெற்றாக வேண்டும்.  நரகம் மிகுந்த வேதனையுள்ளது.  மரணத்துக்குப்பின்னாக ஆன்மீக மனிதன் வேதனையையும், மகிழ்ச்சியையும் உணரக்கூடியவன்.  நரகம் நித்தியமான வேதனையை கொடுக்கக்கூடிய இடம்.  பரலோகம் அல்லது மோட்சம் நித்திய மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடியது.  ஒரு மனிதன் மரணத்துக்குப்பின் இவ்விரண்டில் ஏதாவது ஒன்றைப் பெற்றுத்தான் ஆகவேண்டும்.

    பாவத்துக்கு வரும் தண்டனையைப் பெறுவதுதான் நரக வாழ்வு.  இந்த உலகத்தில் சிலர் வேதனையின் மத்தியிலே புலம்புகிறதைக் கேட்டிருக்கிறோம் வாழ்க்கை நரக வாழ்க்கைப்போல் இருக்கிறது என்று.  அவர்களுக்கு இந்த உலக வாழ்க்கையின் வேதனைகளே நரக வாழ்க்கையாக தோன்றுமானால் இப்படிப்பட்டவர்கள் பலஆயிரம் மடங்கு வேதனையான நரகவாழ்க்கையை அடையும்போது எப்படிப் புலம்புவார்கள். பாவத்தின் தண்டனையாகக் கிடைப்பதுதான் இந்த நரக வாழ்க்கை இதை உணர்ந்து பார்த்து மனந்திரும்புதலாகிய பாவமன்னிப்பைப் பெற்று பரிசுத்தமான ஒரு வாழ்க்கை வாழ்வதே ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் மறுபடியும் பிறந்த வாழ்க்கையாக இருக்கிறது.

    மனிதனுக்கு இந்த வாழ்க்கையைக் கொடுக்கத்தான் பரவோகத்தின் ஆண்டவர் மனித சாயலெடுத்து இயேசு என்கிற பெயரில் இந்த உலகத்தில் தோன்றினார்.  மனிதனுடைய பாவங்களுக்குப் பரிகாரமாக பாவத்தின் தண்டனையின் சின்னமாகிய சிலுவையில் அறையப்பட்டு, இரத்தம்சிந்தி, மரித்து, மாமிச சரீரத்தில் அடக்கம் பண்ணப்பட்டு, ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுந்து, பரலோகத்திற்கு ஏறிச்சென்றார்.  இந்த இயேசுவை இரட்சகராக ஆண்டவராக விசுவாசத்தின் மூலம் ஒரு மனிதன் தன் வாழ்கையில் ஏற்றுக்கெண்டு, பாவத்தை அறிக்கையிட்டு, விட்டுவிடும்போது அவன் தேவ இரக்கம் பெறுகிறான்.  ஒரு மனிதன் பாவ வாழ்க்கைக்குப் பரிகாரமாக சிலுவையில் சிந்தின இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகலப் பாவங்களையும் நீக்கி சுத்திகரிக்கிறது.  இந்த விசுவாசத்தை அறிக்கையிட்டு உடன்படிக்கைப் பண்ணும்போதுதான் ஒரு மனிதன் மறுபடியும் பிறக்கிற வாழ்வை அடைகிறான் அந்த உடன்படிக்கைதான் ஞானஸ்நானம் என்பது.  இந்த வாழ்வை மரணத்துக்குப்பின் பெற்றுக்கொள்ள முடியாது.  மறுபடியும் பிறக்கிற அனுபவத்தை இந்த வாழ்விலேயே பெற்றுக்கொள்ள வேண்டும்.  இங்கே இந்த வாழ்வைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் நித்தியத்தில் நரகமாகிய வாழ்வைப் பெறுவது உறுதி.

    இப்பொழுதே இரட்சணியநாள், இதுவே அநுக்கிரககாலம்

    நம்மில் ஒவ்வொருவரும் எந்த வாழ்க்கை வாழ்கிறோம்.  எந்த வாழ்க்கை வாழவேண்டும் என்பதை இப்பொழுதே தீர்மானிப்பது நல்லது.  வாழ்க்கை என்னும் தேர்வில் வெற்றிப்பெற வாழ்த்துகிறேன்.  மோட்ச வாழ்வை அடைய ஆண்டவர் ஒவ்வொருவருக்கும் அநுக்கிரகஞ் செய்வாராக.