Smart Tenkasi

உங்களுக்குள் இருக்கும் உங்களைப் பாருங்கள

உங்களுக்குள் இருக்கும் உங்களை நீங்கள் காணும்போது உங்கள் உண்மையான முகம் உங்களுக்குத் தெரியும்.  உங்களை நீங்கள் கண்டுகொள்வீர்கள்.


    தினந்தோறும் அநேகம்பேரை பார்க்கிறோம், சிலரிடம் பழகுகிறோம்.  ஓவ்வொரு முகத்துக்குள்ளும் பல்வேறு முகங்கள் ஒழிந்திருக்கிறதைக் காணமுடியும்.  முகத்துக்கு முகம் வேறுபட்டிருக்கிறதுபோல ஒவ்வொருவருடைய குணநலன்களும் மாறுபட்டிருக்கிறதைப் பார்க்கலாம்.


    இந்த வினோதமான உலகில் மற்றவர்களை நாம் அறிந்து கொள்கிறோமோ இல்லையோ நம்மைநாம் அறிந்துகொள்ள வேண்டும்.  அதுதான் மிகவும் முக்கியம்.  நம்மை நாம் அறிந்து கொண்டுவிட்டால் மற்றவர்கள் நம்மை அறிந்தாலென்ன, இல்லாவிட்டால்தான் என்ன?  நம்முடைய வழியில் எவ்வித தயக்கமுமின்றி நாம் முன்னேறிக் கொண்டிருக்கலாம்.  எதிர்புகளைப் பற்றியோ ஏளனங்களைப்பற்றியோ கவலைப்படவேண்டிய அவசியமில்லை.


    முதலில் தாங்கள் யார் என்பதை தங்களுக்குள் கண்டுகொண்டவர்கள்தான் பின்னர் தாங்கள் யார் என்று இவ்வுலகிற்குக் காட்டியிருக்கிறார்கள்.  அவர்கள்தான் காலம் கடந்துபோயும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.  நாம் இந்த மண்ணில் பிறந்து வளர்ந்ததற்கான அடையாளம் நிலைத்திருக்கும்படி நல்லவற்றைச் சௌய்துவிட்டுப் போகவேண்டும்.  இல்லையென்றால் எப்படியோ வாழ்ந்து முடிக்கிற மிருகங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?


    நன்மைச் செய்து தீமையைப் பெறுவதும், அன்பு செய்து பகையைப் பெறுவதும் இந்த உலக வாழ்வில் சகஜம்தான்.  அதற்காக நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கத் தெவையில்லை.  ஏனெனில் நாம் வாழ்ந்ததற்கு ஒரு அர்த்தம் வேண்டுமல்லவா?


    தாய்சிங்கத்தைவிட்டு பிரிந்த குட்டிச் சிங்கம் ஒன்று தாயைவிட்டு தூரம்போய் ஒரு ஆட்டு மந்தையுடன் சேர்ந்து வளர்ந்தது.  அது வளர்ந்து பெரிய சிங்கம் ஆகிவிட்டபோதிலும், ஆட்டைப்போன்ற பாவனைகளோடு நடந்துகொண்டிருந்தது.  அதைத் தேடித்திரிந்த தாய்சிங்கம் ஒரு நாள் அதைக் கண்டுபிடித்தது. அதின் நிலையைக்குறித்து வருந்திய தாய்சிங்கம் அதை அழைத்துக்கொண்டுபோய் ஒரு நீர்ப்பரப்பில் அதன் உருவத்தைக் காட்டினது, அப்பெழுதுதான் தான் யார் என்பது அதற்குத் தெரியவந்தது.  பயங்கரமாகக் கர்ச்சித்தது, கம்பீரமான நடையுடன் தன் தாய் சிங்கத்தோடு காட்டிற்குள் புகுந்தது.


    இப்படித்தான் நம்மில் பலரும் தாங்கள் யார் என்ற உணர்வே இல்லாமல் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  தங்களின் உண்மைத்தன்மை அவர்களுக்குத் தெரிவதில்லை.  தங்கள் உண்மை நிலை தெரியவரும்போது தாங்கள் யார் என்ற அறிவுடன் வாழ ஆரம்பிக்கிறார்கள்.  வெற்றியையும் பெறுகிறார்கள்.  எனவே உங்களுக்குள் இருக்கும் உங்களைப் பாருங்கள், கண்டறியுங்கள்.  இந்த உலக வாழ்வில் நன்மமைகளைச் செய்து ஒளியாய் வாழ்ந்திடுங்கள்.  காலம் கடந்தும் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்.


    தன்னைத்தான் அறிந்து கொள்ளாதவன் இங்கு தலைநிமிர்ந்து வாழமுடியாது.  வஞ்சகர்களின் வலைகளுக்கும், தீய சக்திகளின் சூழ்சிகளுக்கும் தன்னை தப்புவித்துக் கொள்ளமுடியாது.  எனவே எந்த சூழ்நிலையையும் மேற்கொண்டு வெற்றி வாழ்க்கை வாழ முதலில் நம்மை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.  நம் பலம் என்ன? பலவீனம் என்ன? என்பது நமக்குத் தெரியவேண்டும்.  நம் பாதை எது? நாம் எதை நோக்கிப் பயணம் செய்கிறோம் என்ற தெளிவு நமக்கு வேண்டும் நம்பிக்கையுடன் ஓடி இலக்கை அடைவோம்.